ஆக்கினைத் தவம்


எளியமுறைக் குண்டலினி யோகத்தில் (Simplified Kundalini Yoga) முதற்படி ஆக்கினைத் தவம்).

புருவ மத்தியில் உயிர் ஆற்றலை மனம் கவனிப்பதே "ஆக்கினை" எனப்படுகிறது. இது வரை உயிர் மூலாதாரத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. இப்போது புருவ மத்திக்கு மாற்றப்படுகிறது. இம்மாற்றமே ஆன்மிக உயர்வுக்குத் திருப்புமுனை.

மூலாதாரத்தில் உறங்கிடும் குண்டலினி சக்தியை ஆசான் தன் தவ வலிமையால் முதுகுத்தண்டு வழியே தூக்கி நடத்தி வந்து நெற்றியில், புருவ மத்தியில் வைக்கிறார். இவ்வாறு தொட்டு உணர்த்துவதால் "ஸ்பரிச தீட்சை என அழைக்கப்படுகிறது. இது கோழி தனது முட்டை களை ஸ்பரிசத்தால் காத்துக் குஞ்சுகளை வெளிக் கொண்டு வருவதைப் போன்றது.

ஆக்கினையை "முத்து முகப்பு" என்று சித்தர்கள் அழகுற வர்ணிக்கின்றனர். புருவங்கள் இரண்டும், மூக்கும் கூடும் "முச்சந்தி வீடு" என உவமை ஆகுபெயராக இதனை விளக்குகின்றனர். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி என்ற ஐந்து ஆதாரங்களுக்கு மேல் ஆக்கினை ஆறாவதாக இருப்பதால், 'பஞ்சணை மேல் இருக்கை' என்றும் உருவக படுத்துகின்றனர். ஆக்கினை தவம் 'ஏறுபடி' என்றும் அழைக்கப்படுகிறது.



ஆக்கினை தீட்சையில் குரு அவரது ஆற்றலைக் கொண்டு சீடனின் மூலாதாரத்தை கைவிரல்கள் மூலம் தொட்டு, மேலே கொண்டு வந்து, புருவ மத்தியில் நிறுத்துகிறா தொட்டு உணர்த்தியவுடனே பயிற்சியாளர் தனது உயிராற்றலை உணர்கிறார்.

தாய், தந்தை இருவருடைய உடலும் சேர்ந்து உருவாகியது உடல். பாலுக்கு உறை போல குருவின் உயிர்ச்சக்தியும் சிறிது சேரும்போதுதான் உடலோடு எடுத்த பிறவி மாத்திரம் அல்லாது அறிவுக்கு ஒரு பிறவியும் உண்டாகி விடுகிறது.
உயிர் மையமான மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தி இப்போது புருவ மத்தியில் சிறது. ஐம்புலன்கள் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்த மனம் உள் திரும்புகிறது. உயிர் மேல் மனம் ஒன்றுகிறது. ஐம்புலன்கள் அமைதி அடைகின்றன. ஐந்து உணர்வுகளில் நான்கு உணர்வுகள் மறைந்து அழுத்தம் மட்டும் ஆக்கினையில் உணர்கிறோம். மனம் ஆல்பா அலைக்கு (விநாடிக்கு 8-13 அலைச்சுழல் வரை) வருகிறது. மனம் அமைதியடைகிறது. ஆகாமிய கர்ம வினைகள் மறைகின்றன. பிட்யூட்டரி சுரப்பி நன்கு இயங்குகிறது. விழிப்புநிலை உண்டாகின்றது. அறுகுணச் சீரமைப்பு பெற்று, ஐந்து பழிச் செயல்கள் விளையாமல் தடுக்கப்படுகிறது.

முன்னோர்கள் வகுத்துள்ள உளப் பயிற்சி முறையில் நான்கு படிகள் கூறப்பட்டுள்ளன. அவை :

1) பிரத்யாகாரம்: இது வெளிப்பொருட்கள் தொடர்பிலிருந்து மனத்தை
விடுபடுத்திக் கொள்வதாகும்.
2) தாரணா : இது விழிப்போடு மனத்தை ஒரே பொருளில் அல்லது புள்ளியில் நிறுத்திப் பழகுவதாகும்.
3) தியானம் : இது உயிர் மையத்திலிருந்து படர்க்கை நிலையெய்துகின்ற
மனத்தை அது புறப்படும் இடமான உயிரிலேயே ஒடுக்கி நிற்பதாகும்.
4)சமாதி: இது இறை நிலையை ஆசான் விளக்கியவாறுணர்ந்து அப்பேராற்றுலிலேயே மனத்தை ஒன்றச் செய்து அதனுடன் அதுவாகி நிற்கும் பயிற்சியாகும்.
மனவளக்கலை மூலம் குண்டலினியோகப் பயிற்சியைத் தொடங்கும் அன்பர்கள் உபதேசம் பெற்ற அன்றே, ஆக்கினை தீட்சை பெறும்போது, தனது உயிர் ஆற்றலை உணர்வாகப் பெறும்போது,பிரத்யாகாரம், தாரணா, தியானம் எனும் மூவகைப் பயிற்சியினையும் ஒன்றாக்கி உணர்ந்து கொள்ளுகிறார்கள்.
புலன் இயக்கத்திலிருந்து விடுதலை, உயிரையே உற்று நோக்கும் ஓர்மைநிலை உயிர் மையத்தமைந்த அறிவிலேயே மனத்தை லயமாக்கி விடும் ஆழ்நிலை உளப்பயிற்சி ஆகிய இம்மூன்றும் ஒரே நாளில் தெரிந்து கொள்ளுகிறார்கள்.. பயிற்சிக்காலம் கூடக் கூட இதன் பயனையும் அனுபவமாக உணர்ந்து கொள்ள முடியும்.

இந்த முதற்கட்டப் பயிற்சியாகிய ஆக்கினைத் தவத்தால் மனத்திற்கு  ஓர்மைநிலை அமைதி, கூர்மை, புலனடக்கம், சீவகாந்த சேமிப்பு  இவையாவும் கிட்டும்.

அறிவறியும் தவம் (ஆக்கினை)

 "இருவிழிகள் மூக்கு முனை குறிப்பாய் நிற்க,
     எண்ணத்தைப் புருவங்களிடை நிறுத்தி, 
    ஒருமையுடன் குருநெறியில் பழகும்போது,
      உள்ளொளியே பூரித்து மூலமான
   கருவுக்கு மேனோக்கு வேக மூட்டும்.
    கருத்துக்கு இந்நிகழ்ச்சி உணர்வாய்த் தோன்றும்,
  அருவ நிலையாம் ஆதி உருவாய் வந்த
     அத்துவித இரகசியமும் விளக்கமாகும்.:

No comments