நல்ல செயலை உடனடியாக செய், தீயசெயலைத் தள்ளிப் போடு

 ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு , குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது.




அப்போது ராமர், லட்சுமணனை நோக்கி, "லட்சுமணா, ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன், ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா" என்று கூறி அனுப்பினார்.

லட்சுமணன் அருகில் வந்ததும் இராவணன் சிரித்துக் கொண்டே வரவேற்றான். ராமன் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான்.

"லட்சுமணா, ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும், எமனும், இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா? 

நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 

ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப்போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன்.

சூர்ப்பனகை வந்து, சீதாதேவி உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே -அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம்.

அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது.  “ நல்ல செயலை உடனடியாக செய்துமுடி.  “ அது பலன் தரும். 
தீயசெயலைத் தள்ளிப் போடு. அதைச் செய்யாமல் இருக்க வாய்ப்புண்டு " 
என்றான்.

No comments