அகத்தாய்வுப் பயிற்சிகள்

 தவத்தால் மனஅமைதியும், இறைநிலையே தானுமாகவும், தன்னுடன் வாழும் மனிதர்களாகவும் பிற உயிரினங்களாகவும் சடப்பொருட்களாகவும் இருப்பதை உணர்ந்து தெளிந்த நிலை உண்டாகிறது. யாரொருவருக்கும் துன்பம் செய்யாமலும், துன்பப்படுபவர்களுக்கு இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற அன்பும், கருணையும் உள்ளத்தில் உருவாகிறது.



தவத்தின் பயனால் இந்த விளக்கங்களை மனிதன் பெற்றாலும், விளங்கிய வழி வாழ முடியாமல் தத்தளிக்கின்றான். இதற்குக் காரணம் பலப்பல பிறவித் தொடர்களாக மனிதன் உணர்ச்சிவய நிலையிலிருந்து புலன் வழி பெற்ற பழக்கப்பதிவுகளே ஆகும். இப்பழக்கப் பதிவுகளிலிருந்து தன்னை விடுபடுத்திக் கொண்டு விளக்க வழியில் தான் உணர்ந்தவாறு தனக்கும் பிறருக்கும் நன்மையே செய்து வாழும் நிலை வேண்டுமென்றால், அதற்கும் முறையான பயிற்சி தேவைப்படுகிறது.


தன்னிடம் உள்ள குறைகளை போக்கிக் கொண்டு, பிறருக்கும் நன்மையே செய்யும் அறவழி வாழ தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்ட பயிற்சி முறைகளே அகத்தாய்வு பயிற்சிகளாகும்.


அகத்தாய்வு பயிற்சிகளில்


  1. எண்ணம் ஆராய்தல்
  2. ஆசை சீரமைத்தல்
  3. சினம் தவிர்த்தல்
  4. கவலை ஒழித்தல்

நான் யார்?

என்ற தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளை கற்றுக் கொண்டு அதன்படி வாழும்பொழுது குணநலப்பேறு என்ற சிறந்த பண்பினை ஒவ்வொருவரும் அடைய முடியும்.


நம்மிடம் உள்ள தீய வினைப் பதிவுகள் காரணமாக ஒவ்வொரு மனிதனிடமும் ஆறு வேண்டாத குணங்கள் உள்ளன. அவை பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் அதாவது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகும்.


அகத்தாய்வு பயிற்சிகள் மூலம் :

  1. பேராசையை – நிறைமனமாகவும்
  2. சினத்தை – சகிப்புத்தன்மையாகவும்
  3. கடும் பற்றினை – ஈகையாகவும்
  4. முறையற்ற பால் கவர்ச்சியை – கற்பாகவும்
  5. உயர்வு தாழ்வு மனப்பான்மையை – சமநோக்காகவும்
  6. வஞ்சத்தை – மன்னிப்பு ஆகவும்


மாற்றி மனிதநேயம் மலர்ந்து எல்லோரோடும் இணக்கமாக வாழலாம்.


சமுதாயத்திலே நாம் வாழும்போது பிறருடன் தொடர்பு கொண்டுதான் வாழ்ந்தாக வேண்டியுள்ளது. அவர்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு இனிமையாக அமையும் அளவில்தான் வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும் நிலவும். அந்த இனிமையான உறவு அமைய பிறரை வாழ்த்துகின்ற பழக்கம் அவசியம். அந்த வகையில்தான் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு தாரக மந்திரமாக வாழ்க வளமுடன் என்ற வாழ்த்தும் முறையை தந்துள்ளார்கள்.


அமைதியான மனநிலையில் பிறரை வாழ்த்தும் போது எல்லோரோடும் இணக்கமான உறவு ஏற்படும். கருத்து வேறுபாடு உள்ளவர்கள் கூட மனமாற்றம் பெற்று நண்பர்களாகி விடுவார்கள்.

No comments