தியானப் பயிற்சி - பலன்கள்

 


தியானம் செய்யும் முறை : 

1.இடத்தூய்மை - நான் அமர்ந்துள்ள இடத்தைச் சுற்றிலும் நல்ல தெய்வீக ஆற்றலே நிரம்பின. (3 முறை)

2.அருட்பேராற்றல் உடலிலே, உயிரிலே அலை அலையாகப் பாய்வதை உணர்கிறேன். (3 முறை)

3.அருட்காப்பு அருட்பேராற்றல் இரவும், பகலும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லாத் தொழில்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழிநடத்துவதாகவும் அமையுமாக. (1 முறை )

4.அன்னைக்கு வணக்கம், தந்தைக்கு வணக்கம், ஆசானுக்கு வணக்கம்.

5.தவம் (எந்தத் தவம் செய்கிறோமோ, அதற்கேற்ற மையம்)

6.தவத்தை நிறைவு செய்தல்.

7.தவ ஆற்றல் உடல் முழுவதும் பரவட்டும். உடலும், உள்ளமும் தூய்மையும், மேன்மையும் அடையட்டும்.

8.சங்கல்பம் : அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர் ஒழுக்கம், உயர்கல்வி ஓங்கி வாழ்வேன்.

9.வாழ்த்து : சகோதர, சகோதரிகள், உறவினர்கள், சக மாணவர்கள், ஆசிரியர்கள்.

10.நம்மோடு பகைமை உணர்வு கொண்டோர் யாரேனும் இருப்பின் அவர்களும் நல்வாழ்வு பெற வாழ்த்துவோம்.

11.இரண்டொழுக்கப் பண்பாடு :

  • நான் எனது வாழ்நாளிலே யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.
  • துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

12. உலக நல வேட்பு கவி :

உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்

உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும் 

உலகனைத்து நாடுகளின் எல்லை காக்க

ஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்

 உலகில் போர் பகை அச்சமின்றி மக்கள்

உழைத்துண்டு வளம் காத்து வாழ வேண்டும்

 உலகெங்கும் மனித குலம் அமைதி என்னும்

ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்ய வேண்டும்.

13.மழை வாழ்த்து : ஏரி, குளம், கிணறு, ஆறு எல்லாம் நிரம்பி வழிய, மாரி அளவாய்ப் பொழிக, மக்கள் வளமாய் வாழ்க! (3 முறை)

14.வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.

தியானப் பயிற்சிகளின் பலன்கள் :

  1.  மன அமைதி, மன விரிவு, மன நிறைவு, சகிப்புத் தன்மை கிட்டும்.
  2. ஐந்து புலன்கள் மூலம் செலவாகிற உயிர் ஆற்றல் சேமிக்கப்படும். 
  3. மனதின் ஓர்மைத் தன்மை (Concentration), ஏற்புத் திறன் (Receptivity) அறிவுக் கூர்மை (Intelligence) மற்றும் நினைவுத் திறன் (Memory Power) கூடும்.
  4. நாளமில்லாச் சுரப்பிகள் (பிட்யூட்டரி, பீனியல்) இயக்கங்கள் சீரடைகின்றன. மன ஆற்றலும், ஆழ்ந்த அமைதியும் கிட்டும். 
  5. மன இறுக்கம், மனச் சோர்வு சரியாகின்றன. இரத்த அழுத்தம் சீராகிறது. 
  6. தேவையற்ற குழப்பம், பயம் போன்றவற்றில் இருந்து விடுபட முடியும். முகம் பொலிவு பெறும்.
  7. நிர்வாகத் திறன், முடிவெடுக்கும் திறன், செயல்திறன் கூடுகின்றன.
  8. மூளைப் பகுதியில் உள்ள அனைத்து சிற்றறைகளும் இயக்கம் பெறுகின்றன. பிரபஞ்ச சக்தியோடு தொடர்பு கொள்ளும் ஆற்றலும், உள்ளுணர்வும் (Intuition) ஓங்கும்.
  9. எண்ணங்களை ஆராயவும், அகத்தாய்வு செய்யவும் உதவும்.
  10. சாந்தி தவத்தினால், தியானத்தில் பெற்ற சக்தி உடல் ஆற்றலாகவும், மன ஆற்றலாகவும் மாற்றமடைகிறது.
  11. மாணவர்களுக்குச் செயல் திறனும், நினைவாற்றலும் கூடுவதால் அதிக மதிப்பெண்கள் பெற உதவும். நல்வாழ்வுக்குத் தேவையான நல் ஒழுக்க பழக்கங்களைக் கற்று அதன்படி வாழ உதவும்.

குறிப்பு :

  1. தியானப் பயிற்சிகளை மனவளக்கலை ஆசிரியர்கள் மூலம் மட்டுமே கற்றுச் செய்து வரவேண்டும். யாருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடாது.
  2. தியானப் பயிற்சியை காலையிலும், மாலையிலும் குறைந்தது பத்து நிமிடம் செய்ய வேண்டும். இருபது நிமிடத்திற்கு மேல் செய்ய வேண்டாம்.
  3. சாந்தி தவத்தை மனவளக்கலை ஆசிரியர் வழிகாட்டிய காலங்களில் கட்டாயம் செய்து வர வேண்டும். இது மிக மிக முக்கியம்.
  4. பெண்கள் மாதவிலக்கு காலங்களில் சாந்தி தவம் மட்டுமே செய்ய வேண்டும்.
  5. உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் தவறான பழக்கங்களை விட்டுவிடல் வேண்டும்.


No comments