பிராணாயாமம்

மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது என்பதை வோம். அவை : 1) விண் (ஆகாசம்), 2) காற்று (வாயு), 3) நெருப்பு, 4) நீர், 5) கெட்டிப்பொருள். இவ்வைந்து பூதங்களில் வாயு எனப்படும் காற்று மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், மூச்சு என்னும் செயலின் வழியாகவே மற்ற பூதங்களும் உயிரோட்டம் உள்ளதாக இயங்குகின்றன.

உணவு மற்றும் நீர் இல்லாமல் பல நாட்கள் வாழ முடியும். ஆனால், காற்று இன்றி சில நிமிடங்கள் கூட சீவன்கள் வாழ முடியாது.

உயிரானது காற்றை நம்பி உள்ளது. காற்றே உயிர்க்கு ஆதாரமான சக்தியை வழங்குகிறது. இதயம், நுரையீரல், மூளை, முதுகுத்தண்டு போன்ற அனைத்து உடல் உறுப்புகளுக்கும் இயக்க சக்தி அளிப்பது காற்றே ஆகும்.

பித்தம், கபம் மற்றும் உடலின் உறுப்புகள் அனைத்தும் தன்னிச்சையாக இடம்பெயர இயலாதவை. மேகமானது காற்றினால் இடம் மாறுவது போன்று மற்ற உடல் தத்துவங்கள் அனைத்தும் காற்றாலேயே இடமாற்றம் பெறுகின்றன.

காற்றைக் கட்டுப்படுத்தி ஒழுங்குப்படுத்துவதே பிராணாயாமப் பயிற்சியின் நோக்கமாகும். முகத்திற்கு வசீகரமும், மனத்திற்குத் திறனும், உடலுக்கு உணவை ஏற்றுக்கொள்ளும் சீரண சக்தியும் காற்றால் தான் ஏற்படுகிறது.

காற்றினுடைய இயற்கையான குணமே 'அசைதல்'' ஆகும்.

காற்றை அதன் செயல்பாட்டின் அடிப்படையில் ஐந்து வகையாக பிரித்திருக்கிறார்கள். அவை பிராணன், அபானன், உதாணன், சமானன், வியானன் ஆகும். மேலும் ஐந்து உப பிராணன்களும் உள்ளன. இவ்வனைத்து பிராணன்களும் சூக்கும உடலான பிராணமய கோசத்தைச் சேர்ந்தவைகளாகும்.


 நாடி சுத்தி 



செயல்முறை


  1. பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும்.
  2. இடக் கையை சின்முத்திரையுடன் இட முழங்காலில் வைத்துக் கொள்ளவும்.
  3. வலக் கையை நாசிகா முத்திரையில் (ஆள் காட்டி விரல் மற்றும் நடுவிரல் மடக்கி இருத்தல்) வைக்கவும். 
  4. வலக் கை கட்டை விரலை வல மூக்கில் வைத்து அடைத்துக் கொள்ளவும். இட மூக்கு வழியாகக் காற்றைச் சீராக இழுக்கவும்.
  5. பிறகு இட மூக்கை மோதிர விரலால் அடைத்துக் கொண்டு வல மூக்கு வழியாகக் காற்றைச் சீராக வெளிவிடவும். பிறகு அதே மூக்கு வழியாகக் காற்றை இழுத்து, இட மூக்கு வழியாக வெளிவிடவும். 
  6. இது ஒரு சுற்றாகும். உள் மூச்சும், வெளிமூச்சும் சம நேரத்திற்கு இருக்குமாறு பயிற்சி செய்ய வேண்டும். இதே போன்று 5லிருந்து 20 சுற்றுகள் வரை செய்யலாம். 
  7.  விடியற்காலையும், மாலையும் பயிற்சிக்கு உகந்த நேரங்களாகும்.


நன்மைகள்

  1.  உடல் மற்றும் மூளைச் செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. 
  2.  நாடி சுத்தியாவதால் தியானம் செய்ய ஏற்றதாகிறது. 
  3. நாடிகள் தூய்மையடையும்போது உடல் இலேசாகிறது. கண்கள் ஒளி பெறுகின்றன. சீரண சக்தி அதிகரிக்கிறது.


உஜ்ஜயி (உஸ் என்ற ஒலியுடன் பிராணாயாமம் ) 



செயல்முறை

  1. தியான ஆசனத்தில் அமரவும். 
  2. மூச்சை முழுவதும் வெளியிடவும். பிறகு இரு மூக்குகள் வழியாக மெல்ல மூச்சை உள் இழுக்கவும்,
  3. உள் வரும் காற்றை மேல்வாய் அன்னத்தால் உணர்ந்து வரவும். கிளாட்டிஸ் பாதி மூடி "உஸ்" என்ற ஒலி தொண்டையில் உண்டாகும். கழுத்தை முன்புறம் வளைத்து ஜலந்தர பந்தா செய்யவும் .
  4. சிறிது நேரம் கழித்துத் தலைப்பகுதியை தளர்த்தி மூச்சை வெளிவிடவும். இது ஒரு சுற்றாகும். 
  5.  இதுபோன்று 10 சுற்றுகள் செய்யவும். 


நன்மைகள்

1. தைராய்டு சுரப்பியைத் தூண்டுகிறது.

2. மூச்சுக்காற்று மண்டலம் சீராகிறது.


சிட்டாலி (மூக்கு, நாக்கு பிராணாயாமம்) 



செயல்முறை

  1.  தியான ஆசனத்தில் அமரவும்.
  2.  கைகள் இரண்டையும் சின்முத்திரை யில் முழங்கால் மேல் வைக்கவும்.
  3. நாக்கின் ஒரு பகுதி வெளியே நீட்டி நீளவாக்கில் மடித்து நீண்ட குறுகலான குழாய் போன்று செய்யவும். 
  4. மூச்சை உள் இழுத்து, உட்புறத்தை ஈரக் காற்றுக் குளிர வைப்பதை கவனிக்கவும். பிறகு நாக்கை உள் இழுத்து வாயை மூட வேண்டும்.
  5. ஜலந்திர பந்தா (5 வினாடி) செய்த பிறகு இரண்டு மூக்குகள் வழியாக மூச்சை வெளியிட வேண்டும். இரு மூக்குகளிலும் சூடான காற்று வெளியேறுவதைக் கவனிக்கவும். 
  6.  இதேபோன்று ஐந்து முதல் இருபது சுற்றுகள் வரை செய்யவும்.

நன்மைகள்

  1. உடலைக் குளிர்ச்சியாக்கக்கூடியது.
  2. தாகத்தைப் போக்குகிறது.
  3. பித்த நீர் சுரப்பியைக் கட்டுப்படுத்துகிறது.


 சித்காரி (நாக்கைக் கீழ் வளைத்துச் செய்யும் பிராணாயாமம்) 



செயல்முறை

  1. தியான ஆசனத்தில் அமரவும். 
  2. வாயைச் சிறிது திறந்து நாக்கின் நுனியை முன்வரிசை கீழ் பற்களைத் தொடுமாறு மடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 
  3. காற்றை வாயினால் உள்ளே இழுக்க வேண்டும். ஸ்ஸ்ஸ் என்ற சத்தம் உண்டாகும்.
  4. ஜலந்திர பந்தா செய்த பின்பு காற்றை இரண்டு மூக்குகள் வழியாக வெளியிட வேண்டும். 
  5.  ஐந்து முதல் இருபது சுற்றுகள் வரை செய்யவும்.

நன்மைகள்

  1. உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது.
  2. பசி, தாகம், சோம்பலைப் போக்குகிறது.



 கபாலபதி 



செயல்முறை

  1. பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் |அமரவும். மூலபந்தம் செய்து கொள்ளவும். 
  2. இரு மூக்குகள் வழியாக மூச்சைச் சாதாரணமாக உள்ளே இழுக்க வேண்டும். மூச்சை வெளியே விடுதல் மிக வேகமாகவும், கவனமாகவும் செய்ய வேண்டும்.
  3. மூச்சை வெளியிடும்போது மணிப்பூரகம், சுவாதிஸ்டானம் மற்றும் மூலாதாரச் சக்கரத்தில் தேவையான அளவு வேகத்தைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது வயிற்றுப் பகுதியானது மேல்நோக்கி வேகமாகச் செல்லும்.
  4.  இந்தப் பிராணாயாமத்தை தினமும் ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் வரை செய்யலாம். 


நன்மைகள்

  1. நுரையீரல், மூச்சுக் குழாய்கள் சுத்தப்படுத்தப்படுகின்றன.
  2. மூச்சுத் தொந்தரவு ஆஸ்துமா சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்குகின்றன. 
  3. மூளையில் உள்ள உயிரணுக்களை ஊக்குவிக்கிறது.
  4.  நரம்பு மண்டலம் உறுதிப்படுகிறது.




No comments