கருமையத் தூய்மை

 கருமையத்தைக் களங்கப்படுத்தும் செயல்கள் :

                                                      கருமையத் தூய்மை

 "நிறைவு பெறாமல் இருக்கும் ஆசைகளின் கூட்டம்;

நெஞ்சம், மனம், பேச்சு இடைப் பிணக்காகும் பொய்கள்;

 மறைமுகமாய் நேர்முகமாய்ப் பிறர் உளம் வருத்தல்;

மற்ற உயிர் சுதந்திரமும் வாழ்வின் வளம் பறித்தல்;

 நிறைவழிக்கும் பொறாமை, சினம், வஞ்சம் இவை காத்தல்;

நெறிபிறழ்ந்த உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, 

கறைப்படுத்தும் எண்ணம் இவை கருமையம்தன்னைக்

களங்கப்படுத்திவிடும் கருத்தோடு சீர்செய்வோம்.''



கருமையத்தைக் களங்கப்படுத்தும் செயல்கள் பின்வருமாறு :

  1. ஆசைகளின் இருப்பு கூடக் கூட மன அலைச்சுழல் விரைவு அதிகமாகிக் காந்தக் கருமைய ஆற்றலைக் குறைத்து வரும். 
  2. பொய் சொல்லுதல்.
  3. பிறர் மனம் வருந்தத்தக்க செயல்களைச் செய்து சாபம் ஏற்றல். 
  4. பொறாமை, சினம், வஞ்சம் முதலிய குணங்களால் பிறருக்குத் தீங்கிழைக்க நினைத்தல். 
  5. உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் ஆகிய ஐந்தையும், அலட்சி செய்தல், மிகையாக அனுபவித்தல், முரணாக அனுபவித்தல். இதனால் உடல் செல்கள், புலன்கள், உறுப்புகள் கேடுறுதல். 
  6. உடல் வலிவும் நலமும், கல்வி உயர்வும் நலமும், இருந்தபோதிலும் அதை பயன்படுத்திப் பிறர்க்கு உதவி செய்யாது சோம்பேறியாக இருத்தல், பிறர் வளம் பறித்துண்டு வாழ்தல், பிறர் வாழ்க்கைச் சுதந்திரத்தைப் பறித்தல். 



கருமையத்தைத் தூய்மை செய்யும் செயல்கள்

  1. தாய்,தந்தை, குரு, ஆட்சித்தலைவர், தெய்வம் இவர்களை மதித்து வாழ்தல். 
  2. ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றுமிணைந்த அறநெறி பின்பற்றி வாழ்தல். 
  3. மனஓர்மைக்கும், அறிவு விளக்கத்துக்கும் ஏற்ற அகத்தவப் பயிற்சியினை முறையாகச் செய்து வருதல்.
  4.  இரத்தம், வெப்பம், காற்று, உயிர், சீவகாந்தம் ஆகியவை தடையின்றி ஓடி உடலைக் காத்துக் கொள்ள ஏற்ற உடற்பயிற்சிகளை அளவோடு செய்து வருதல். 
  5.  பெற்றோர்கள், வாழ்க்கைத் துணைவர், பெற்ற குழந்தைகள் இவர்களைப் பொறுப் போடும், அக்கறையோடும் காத்து உதவி வருதல்.
  6. இறைநிலையுணர்ந்து அந்நிலையோடு அடிக்கடி ஒன்றிப் பழகுதல்.
  7.  மனித முயற்சியால் உற்பத்தி செய்த பொருட்களையும், இயற்கை வளத்தையும், பிறர் உபயோகிக்கும் பொருட்களையும் சேதப்படுத்தாது மதித்து நடத்தல்.
  8.  நாம் பார்க்கும் ஒவ்வொருவர் உடலும் இயற்கை என்ற பேராற்றலால் கட்டப் பட்டிருக்கும் பெருமையை உணர்ந்து, உடலுக்குள் அறிவாக விளங்குவது தெய்வத்தின் ஒளியே என்று மதித்து ஒத்தும் உதவியும் வாழ்ந்து வருதல். 
  9. உள்ளத்தில் பகை, வஞ்சம், எதையும் வைத்துக் கொள்ளாமல் மன்னிப்பும், கருணையும் கொண்டு எல்லோருடனும் இன்முகத்தோடும் அன்போடும் பழகுதல்.
  10. நாடு, மதம், சாதி, இனம், மொழி இவற்றால் மனிதரை வேறுபடுத்திக் காணாமல் எல்லோரும் இயற்கையின் மக்கள் என்ற நினைவில் வாழ்தல்.

No comments