துரியாதீதத் தவம்



 குண்டலினி யோகத்தில் முடிவான உச்ச நிலை "துரியாதீதம்" என்ற தவநிலை யாகும். இப்பயிற்சி இறைநிலையோடு எண்ணத்தைக் கலக்கவிட்டுக் கருமையத் தூய்மையும், மேன்மையும் பெற்று, பிறவிப் பயனை முழுமையாக்குவதாகும்.

இறுதியாக, துரியாதீத தவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதலில் மனத்தை பேரியக்க மண்டலம் முழுவதும் நிறைந் துள்ள வான்காந்தத்தோடு கலக்க விட்டுக் கடைசியாக இறைநிலையான பூரணப் பொருளோடு (சுத்தவெளியோடு) கலந்து ஒன்றாகி அமையும் பயிற்சிதான் துரியாதீதப் பயிற்சி. 

துரியாதீதமே சீவப் பிரம்ம ஐக்கிய முக்தி. துரியாதீதமே வீடுபேறு. மனிதன் எதை நினைக்கிறானோ அதுவாகவே மாறி விடுகின்றான். அவனது மனம் அந்த வடிவத்தை எடுத்துக் கொள்கின்றது. இது மேல்நாட்டுத் தத்துவ ஞானிகளும் ஏற்றுக் கொண்ட ஒரு தத்துவம். அந்தத் தத்துவ அடிப்படையில்தான் பிரம்மத்தை நினைக்கும் மனமும் பிரம்மமாகவே, ஆதியாகவே, மாறிப் பிரம்மத்திற்குச் சமமான சமாதி நிலையை அடைகிறது.

சமம்+ஆதி = சமாதி. சுத்தவெளிதான் ஆதிநிலை.துரியாதீத தவம் ஒரு மாபெரும் புதையல். இதில் எல்லாமே அடக்கம். எந்த அதிர் வியக்கத்தில் (frequency) மனம் நின்றால் பிரபஞ்ச இரகசியம் எல்லாம் அறியப்படுமோ அந்த இடந்தான் சமாதி நிலை.

ஆசான் தனது மன ஆற்றல் மூலம் துரியாதீத தீட்சை கொடுக்கிறார். இதனை 'பாவனை' தீட்சை என்றும் கூர்ம தீட்சை என்றும், ஞான தீட்சை என்றும் கூறுவர். இதற்கு ஆமையை எடுத்துக்காட்டாக சான்றோர் கூறுவர்.

ஆமையானது கரையில் முட்டையிட்டு விட்டுக் கடலுக்குள் நெடுந்தூரம் சென்று விட்டாலும், தான் இட்ட முட்டைகளை எண்ணி எண்ணி அந்த ஆற்றல் மூலம் கரையிலுள்ள முட்டைகளைப் பொறியச் செய்வதுபோல், கருணைமிகு ஆசான் தனது எண்ண ஆற்றல் மூலம் சீடரைப் பிரபஞ்சத் தோற்றங்களை எல்லாம் கடந்து சுத்தவெளிக்கு இட்டுச் செல்கிறார். அதனால் அது கூர்ம தீட்சை எனப்படுகிறது. குருவானவர் தன்னுடைய உயிராற்றலோடு சீடரின் உயிராற்றலையும் இணைத்துக் கொண்டு பிரபஞ்சத் தோற்றங்களையெல்லாம் கடந்து தூய வெளியான இறைநிலையில் ஆழ்த்துகிறார்.


நாம் சேர வேண்டிய இடம் இறைநிலை. அறிவு உயர்ந்து இறைநிலையை உணர்ந்து, இறைநிலையேதான் அறிவாக இருக்கின்றது என்ற ஒரு தெளிவு வரவேண்டும். அதற்கு இதுவரைவில் உள்ள தேவையில்லாத பழக்க வழக்கங்கள், உணர்ச்சி வயப்பட்ட வினைப் பதிவுகள் ஆகியவை எல்லாம் நின்றால்தான். கழிந்தால்தான் அந்த உயர்ந்த எண்ணங் களிலே மனம் நிற்கும். மெல்லிய அலைச் சுழலில்தான் இறையுணர்வு உண்டாகும். பயிற்சியில்லையானால் இறைநிலைக்குப் போவது அரிது.

துரியாதீதத் தவப் பயன்கள் :

  1. இறைநிலையுடன் மனம் ஒன்றி இணைந்து விடுகிறது.
  2. முழுமைப்பேறு உண்டாகிறது.
  3. பாவப்பதிவுகள் அழிகின்றன; சஞ்சீத கர்மாவிலிருந்து (முன்வினை) விடுவிக்கிறது
  4.  ஆணவம், கன்மம், மாயை அடியோடு நீங்குகிறது.
  5. முக்கால ஞானம் மலர்கிறது. நுண்மாண் நுழைபுலன் அமைகிறது. 6. குருவின் உயிர்க்கலப்பு ஏற்படுகிறது.
  6. பிறவித் தொடர் அறுக்கப்படுகிறது

No comments