ஐந்தொழுக்கப் பண்பாடு

 ஐந்தொழுக்கப் பண்பாடு



விளக்கம் :

1) தன் உடல் உழைப்பாலும் அறிவின் திறனாலும் உற்பத்தி செய்யும் பொருட்களை அல்லது அதற்கு மாற்றாகப் பண்டமாற்று முறையில் கொள்ளும் பொருட்களை உபயோகித்துத்தான் வாழ வேண்டும். இதனால் ஒவ்வொருவரும் மனித சமுதாயத் தேவையை முடிக்கக் கூடிய ஒரு பொருளை உற்பத்தி செய்வது, அதை அனுபவிப்பது என்பது தவிர்க்க முடியாத பொறுப்பு.

2) தன் வாழ்க்கையை மற்றவர்களின் உடலுக்கோ மனத்திற்கோ துன்பம் தரக்கூடாது என்ற உறுதியோடு செயல் புரிந்து வாழ்வது.

3) உணவுக்காக பிற உயிரைக் கொல்வது என்ற செயல், உணவு உற்பத்தி செய்யத் தெரியாத விலங்கினத்திற்குத்தான் இயல்பானது. தனக்கு வேண்டிய உணவை, வாழ்க்கைப் பொருட்களைத் தானே உற்பத்தி செய்து கொள்ளத் தெரிந்தவன் மனிதன். உயிரைக் கொல்வது என்பது அறிவில் சிறப்படைந்த, தொழிற் திறனில் மேன்மையடைந்த மனிதனுக்குப் பொருந்தாது.

தன் உணவைத் தன் உழைப்பால் பெற முடியாத மனிதன், தனது தேவைகளை எவ்வாறு முடிக்க முடியும்? பிறருடைய உரிமை, சுதந்தரம் இவற்றைப் பறித்துண்டுதான் வாழ வேண்டும்.

மனித இனத்தில் பறித்துண்டு வாழ்வது மாபெரும் குற்றமாகும். இந்தக் குற்றம் சமுதாயத்தையே செல்லரித்தப் புத்தகம் போல் சீர்குலைத்து விடும். எனவே இந்த ஐந்து ஒழுக்கங்களில் இதற்கும் போதிய மதிப்பளித்து வாழ வேண்டியது மனிதனுடைய கடமை.

பிற உயிரைக் கொல்லும் மாபெரும் குற்றம் விலங்கினங்களுக்கு இயல்பானாலும், இது மனித குலத்தில் வாழ்வை நச்சாக்கும் சிக்கல்களையும், துன்பங்களையும் பெருக்கின்ற பாவச் செயலாகும். அதனால் இதைப் படிப்படியாகத் தவிர்த்து விட வேண்டும்.

4) மனித சமுதாயத்தில் உழைப்பினாலும், அறிவினாலும் பெற்ற பொருட்களைத் தனது என்று உரிமை கொண்டு உபயோகித்து வாழ்வதே நீதியாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. இந்த நீதிக்கு முரணாகப் பிறர் பொருளையோ, வாழ்க்கைச் சுதந்தரத் * தையோ பறித்தல் சமுதாயக் குற்றமாகக் கருதப்படும். ஏனெனில், இக்குற்றம் எவரையுமே சுதந்தரத்தோடும் நீதியுணர்வோடும் வாழச் செய்யாது.

5) பிறர் துன்பம் போக்கும் அன்பும் வேண்டும். அறநெறி நின்று வாழ வேண்டியது மனித வாழ்வின் பாதுகாப்புக்கும், பராமரிப்புக்கும் இன்றியமையாதது. துன்பம் தவிர்த்த வாழ்வே அறநெறியாகும். ஏதேனும் ஒரு காரணத்தினால் இயற்கைச் சீற்றத்தினாலேயோ, அறநெறி பிறழ்ந்த செயலின் விளைவினாலேயோ, ஒருவர் துன்பப்படுவாரேயானால், அதைத் தகுந்த முறையில் தனது அறிவு, செயல் மூலம் முடிந்த வரை அந்தத் துன்பங் களைக் குறைப்பது, நீக்குவது மனிதத் தன்மையாகும்.

ஆக இவ்வைந்து ஒழுக்கங்களும் தனிமனிதன் வாழ்வில் பிறழாமல் பின்பற்ற வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையும் பொறுப்புமாகும். இதனால் தனி மனிதன் வாழ்வில் துன்பங்களைத் தவிர்த்து, உடல் நலமும் மனவளமும் காத்து வாழ முடியும். இதன் விளைவு சமுதாயத்திற்கு நன்மையாகவும், அமைதி, நிறைவு இவற்றைத் தரத்தக்கதாகவும் அமையும்.

ஆகவே, ஐந்தொழுக்கப் பண்பாடு மனிதனுக்கு மிகவும் அவசியம். இதுவரையில் எந்தெந்த விதத்தில் மனிதன் தவறு செய்திருந்தாலும் அவற்றையெல்லாம் சீர் செய்து தானும், தனைச் சார்ந்த பிறரும் நலமாக வாழ ஏற்ற பண்பாடாகும். இதுவே தனி மனிதன் சீர்திருத்தமும் பண்பாடும் ஆகும்.

No comments