இரண்டொழுக்கப் பண்பாடு அதன் விளக்கம்!
இரண்டொழுக்கப் பண்பாடு
ஐந்தொழுக்கப் பண்பாடு ஒரு நீளமான, ஆழ்ந்த ஆராய்ச்சிக்குரிய தத்துவமாக இருப்பதால், எல்லா நாட்டிலும் உள்ள பொது மக்களால் உணர்ந்து கொள்வது கடினமாக இருக்கும். அதற்காக ஐந்து பேரொழுக்கங்களையும் இணைத்து அனைவரும் பயனாகப் பெறும் வகையில், இரண்டே ஒழுக்கங்களாகச் சுருக்கி, சங்கல்பம் என்ற முறையில் போதித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அவை :
சங்கல்பம் :
1) நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர
மாட்டேன்.
2) துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.
இந்தப் பண்பாட்டுச் சுருக்கமான சங்கல்பம் மிகவும் மேன்மையான வாழ்வை மனித குலத்துக்கு அளிக்க வல்லது.
இதே நோக்கத்தோடு சமுதாயத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் அறிஞர் பெரு மக்கள் எழுதிய நூல்கள் நான்கு வேதங்கள், ஆறு சாத்திரங்கள், பதினெட்டு புராணங்கள், அறுபத்தி நான்கு கலைகள் ஆகும். அவற்றின் நோக்கமும், பயனும் சுருக்கமாகக் கருத்துக்குக் கொண்டுவந்தால் அவ்வாறு பெற்ற முடிவுகள் அனைத்தும் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு ஒழுக்க சங்கல்பத்தில் அடங்கியிருக்கக் காணலாம்.
நாம் எத்தனையோ படிக்கிறோம். எத்தனையோ கற்றுக் கொள்கிறோம். அத்தனையும் செயல்படும்போது நினைவுக்கு வராது. ஆனால், எது நினைவுக்கு வரும்? செயல் செய்து பழகின அனுபவம் எதுவோ, அதுமாத்திரம்தான் மனத்தில் நிற்கும்.
அதனால், 'யாருடைய உடலுக்கும் மனதுக்கும் நான் துன்பம் தரமாட்டேன்' என்ற உறுதி மொழியைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்து விடவேண்டும். குடும்பத்திற்குள்ளாகவே பழகிக் கொள்ள வேண்டும். அப்படிப் பழகிக் கொண்டால் அதுவே மனிதனுக்குத் தன்மையாக மாறி விடும். வெளியில் எங்கே போனாலும், யாரோடு பேசினாலும், அதே தன்மையாகத்தான் வரும்.
அப்படி உலகம் முழுவதும் மனிதகுலம் 'பிறருக்குத் துன்பம் செய்வது இல்லை. பிறர் துன்பத்தைப் போக்க வேண்டும்' என்று உறுதிகொண்டு செய்து வந்தால் குடும்பத்திலேயே அமைதியும், மகிழ்ச்சியும் நிறைவும் வரும். இதைக் கற்றுக் கொள்வதற்குச் சிரமம் இல்லை. ஆனால், பலனோ அதிகம். எல்லா நன்மைகளும் உண்டாகும். அமைதியும் உண்டாகும்.
உலகத்தில் போர் நடக்கிறது என்றால் பிறருக்குத் துன்பம் கொடுப்பதுதானே போர். ஒருவரையொருவர் வெட்டுகிறார்கள், அடித்துக் கொள்கிறார்கள், கொன்று குவிக்கிறார்கள். யாருக்கும் துன்பம் தருவதில்லை என்றால் போர் நடக்குமா? இந்த இரண்டே ஒழுக்கத்தைப் பின்பற்றினால், பழக்கத்தில் கொண்டு வந்து பார்த்தால் உலகமே திருந்திவிடும். இன்று முதல் புதிய திருப்பம் வரட்டும். ஒவ்வொருவரும் ஆன்மிக ஒழுக்கத்தில் ஒரு தூணாக இருந்து ஒரு பெரியத் தத்துஞானியாகவே இருக்க முடியும்.
Post a Comment